மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கிய கடனை கணவர் திருப்பி செலுத்தத் தவறியதால் அவரது மனைவியைக் கந்துவட்டிக்காரன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 47 வயதான ஒருவர் கந்துவட்டி தொழில் செய்து வருகிறார். அவரிடம் இருந்து கடன் வாங்கிய ஒருவர், கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கொடூரன் கடன் வாங்கிய அந்த நபரின் மனைவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த கொடூரம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அந்த குற்றவாளியைக் கைது செய்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த போலீசார் நடத்திய விசாரணையில் தான் பல முக்கிய தகவல்கள் தெரியவந்தது. அதாவது, அந்த பெண்ணின் கணவர் கடன் வாங்கியுள்ளார். ஆனால், பணத்தை திரும்பச் செலுத்த முடியவில்லை. வட்டியும் கூட உரிய நேரத்தில் செலுத்த அவர் தவறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டிக்காரன், கடன் வாங்கிய நபரைக் கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளான்.
மேலும், அவர் கண் முன்னாலேயே அவரது மனைவியைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த கொடூரத்தை அவன் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளான். அதன் ஒரு பகுதியை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளான். அதன் பின்னரே பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அடுத்தகட்ட விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மீது பலாத்கார வழக்கு மட்டுமின்றி ஐடி பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.