பெங்களூரு விமான நிலையத்தில் பரிசோதனையின்போது சட்டையை கழற்றும்படி வற்புறுத்தியதாக சிஐஎஸ்எப்புக்கு எதிராக இளம்பெண் ஒருவர் பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த பெண் இசை கலைஞர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானம் மூலம் வெளியூருக்கு செல்வதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அப்போது எனது உடைமைகளையும், சக பயணிகளின் உடைமைகளையும் விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது, சோதனை என்ற பெயரில் சட்டையை கழற்றும்படி என்னை வற்புறுத்தினர். இது உண்மையிலேயே எனக்கு நடந்த அவமானகரமான செயல். சோதனையின் போது பெண்கள் எதற்காக சட்டையை கழற்ற வேண்டும்? விமான நிலைய ஊழியர்களின் இந்த நடத்தையால் நான் சோர்ந்து போய் உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விமான நிலைய நிர்வாகம், அந்த பெண்ணுக்கு அளித்த பதிலில், ”சிரமத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். சம்பவம் தொடர்பாக விமான நிலைய செயல்பாட்டு குழுவுக்கும், சிஐஎஸ்எப் பாதுகாப்பு குழுவுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்” என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிஐஎஸ்எப் தரப்பு, ”பெங்களூர் விமான நிலையத்தில் ஆடைகளை கழற்றி உள்ளாடையுடன் நிற்க வைத்தாக பெண் பயணி கூறியது தவறானது. சில சமயங்களில் பாதுகாப்பு தொடர்பான சோதனைகளில் இடையூறாக இருக்கும் ஜாக்கெட்டுகள், செருப்புகள், கோட்டுகளை அகற்ற சொல்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், பாதுகாப்பு சோதனைக்காக அந்த பெண்ணிடம் சட்டையை ஸ்கேனரில் வைக்க கூறப்பட்டது. சட்டையை கழற்றி கொடுக்கும்போது அந்த பயணி மகிழ்ச்சியாக இல்லை. இதனால் சட்டையை கொண்டு வரும்வரை அறையில் இருக்கும்படி சிஐஎஸ்எப் பெண் ஊழியர் கூறினார். ஆனால் அதற்கு மறுத்தவர் அங்கேயே நின்ற நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.