நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?, இதுகுறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷியங்கள் குறித்து பார்க்கலாம்.
கடந்த காலத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதாவை மார்ச் 9, 2010 அன்று நிறைவேற்றியது. இருப்பினும், மக்களவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரண்டு முறை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டாலும் நிலுவையிலேயே இருந்து காலாவதியானது. இந்த நிலையில், பல வருடங்களாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால், தற்போதைய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டதொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தச் செய்தியை வரவேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?, இதுகுறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷியங்கள் குறித்து பார்க்கலாம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சட்டங்களில் ஒன்றாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும், மக்கள் தொகையில் 50% பெண்கள் இருக்கும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் பெண்களுக்கு போதுமான குரல் கொடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா அரசியலமைப்பு (108வது திருத்தம்) மசோதா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்னும் மக்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க இந்த மசோதா வழிவகை செய்யும். ஒதுக்கப்பட்ட இடங்களின் ஒதுக்கீடு பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும்.
மசோதா குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் என்னென்ன? பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கோருகிறது. இந்த மசோதாவின்படி, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு அந்த குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட இருக்கைகள் சுழற்சி முறையில் மாற்றப்படும். இந்த மசோதாவின்படி, திருத்தச் சட்டம் தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிறுத்தப்படும்.
இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள், பெண்களின் நிலையை மேம்படுத்த உறுதியான நடவடிக்கை அவசியம் என்றும், பஞ்சாயத்து அளவில் இடஒதுக்கீடு எப்படி கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரமளிக்கிறது என்பதற்கான காரண ஆய்வுகளை மேற்கோள் காட்டுகின்றனர். அதே போல மசோதாவை எதிர்ப்பவர்கள், இந்த மசோதா, பெண்கள் சமத்துவமற்றவர்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் போட்டியிடுவதில்லை என்ற எண்ணத்தை இது உருவாக்குகின்றது என்று கூறுகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதிகள் சுழற்சி முறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதியில் பணியாற்றுவதற்கான ஊக்கத்தை குறைக்கலாம் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்
இறுதியாக 1996ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆய்வு செய்த ஒரு அறிக்கை, OBCகளுக்கான இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டவுடன் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ராஜ்யசபா மற்றும் சட்ட மன்றங்களுக்கு இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரைகள் எதுவும் மசோதாவில் இணைக்கப்படவில்லை.