இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் மேற்கு மூலையில் அமைந்துள்ள மாகாணம் ஆச்சே. இங்கு மிகவும் கட்டுக்கோப்பான இஸ்லாமிய சட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் தான் தற்போது வரை ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆச்சே மாகாணத்தை பொறுத்தவரை குற்றம் செய்பவருக்கு தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்கப்படுவது உள்ளிட்ட நூதன சட்டங்கள் அமலில் உள்ளன.
சூதாட்டம், மது அருந்துவது, கள்ளத்தொடர்பு போன்ற எந்த குற்றமாக இருந்தாலும் அதற்கான தண்டனைகள் பொது இடத்தில் தான் வழங்கப்படும். அந்தவகையில் தற்போது திருமணம் மற்றும் குடும்ப உறவுக்குள் வராத ஆண் – பெண் இருவரும் ஒன்றாக வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்களது வாகனப் பயணங்களை ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதகுருக்களின் பரிந்துரை அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆச்சே மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த மாகாணத்தின் ஒரு சில மாவட்டங்களில் நடைமுறையில் இருந்த இந்த கட்டுப்பாடு தற்போது, மாகாணம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.