பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கர்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்து விட்டதாக கடந்த 2ஆம் தேதி அவரது குடும்பத்தினரே அறிவித்தனர். இதனால் அவரது ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு இரங்கல் தெரிவித்தும் வந்தனர். இதற்கிடையே, தான் இறந்துவிட்டதாக வெளியிட்ட தகவல் பொய்யானது என்றும், நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் கூறி பூனம் பாண்டே அடுத்த நாளே ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.
அந்த வீடியோவில், ‘நான் உயிரோடுதான் இருக்கிறேன். கருப்பை வாய் புற்றுநோய் தாக்கி ஏராளமான பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். ஆனால், மற்ற வகை புற்றுநோய்களை ஒப்பிடுகையில் கருப்பைவாய் புற்றுநோய் என்பது தடுக்ககூடிய நோய்தான். உரிய பரிசோதனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டால் இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும். உயிரிழப்பை தடுத்து நிறுத்த முடியும். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கொல்லும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை செய்தேன்” என்று பூனம் பாண்டே தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அவர் மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பூனம் பாண்டேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் தனது வக்கீல் ஷயான் சச்சின் பாசு என்பவர் மூலம் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும், மன உளைச்சலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயாராகியுள்ளார்.