சென்னை, தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது;-
தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மிகவும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல், தென்காசி அருகே நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை கண்டித்து வெளியிட்ட மற்றொரு டுவிட் பதிவில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:-
நவீன யுகத்திலும் தீண்டாமை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசியில் மட்டுமல்ல, தமிழகத்தில் இனி எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது என கூறியுள்ளார்.