புதிய விதிமுறைகளால் ஏப்ரல் 1 முதல், கூகிள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் UPI சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாட்களுக்கு மேல் செயலில் இல்லாவிட்டால், வங்கிக் கணக்குகளிலிருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இந்த புதிய விதி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இந்த புதிய விதி காரணமாக, உங்கள் வங்கிக் கணக்கு செயலற்ற மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும், மேலும் யுபிஐ பணம் செலுத்த முயற்சிக்கும்போது நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களின் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு NPCI இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.
இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது: வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செயலற்ற மொபைல் எண்களை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வேறு ஒருவருக்கு மறுஒதுக்கீடு செய்திருந்தால், அது மோசடிக்கான வாய்ப்பாக அமையும், எனவே குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அத்தகைய ஆபத்துகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்த புதிய விதியை NPCI அமல்படுத்தியுள்ளது. செயலற்ற மொபைல் எண்கள், வங்கி மற்றும் யுபிஐ அமைப்புகளுக்குள் தொழில்நுட்பக் கோளாறுகளை உருவாக்கக்கூடும்.
UPI பரிவர்த்தனைகளை சுலபமாக செய்ய, உங்கள் வங்கிக் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை செயலில் வைத்திருக்க வேண்டும். இது பணம் செலுத்தும் போது முக்கிய அடையாளமாக செயல்பட்டு, உங்கள் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் நடைபெற உதவுகிறது. செயலற்ற மொபைல் எண் வேறொரு நபருக்கு ஒதுக்கப்பட்டால், பரிவர்த்தனை தோல்வி அல்லது தவறான கட்டணங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், உங்கள் எண்ணை புதுப்பித்து வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள்.
மொபைல் எண்ணை பரிசோதிக்க வேண்டும்: உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயலில் இல்லையா அல்லது நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யப்படவில்லையா? அப்படியென்றால், அது இன்னும் உங்கள் பெயரில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களை (ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் போன்றவை) உடனடியாக தொடர்பு கொண்டு,மொபைல் எண்ணை மீண்டும் செயல்படுத்துங்கள் (அல்லது) வங்கிக் கணக்கில் புதிய எண்ணை புதுப்பியுங்கள். இதனை மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில் வங்கி கணக்கு அல்லது UPI சேவைகள் முடக்கப்படும். எனவே, உங்கள் தகவல்கள் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்துங்கள்.