காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாணவன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மாணவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பொறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக அந்த மாணவனுக்கு டீ குடிக்கப் பயன்படுத்தும் கப்பை வைத்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, இதனை அங்கிருந்தவர்களில் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பலரும் அந்த வீடியோவைப் பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், உத்திரமேரூர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் சம்பவம் குறித்து உரிய விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.