உத்தரபிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த 30 வயது தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஒருவர் மனைவி தன்னை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
ஆக்ராவில் உள்ள டிஃபென்ஸ் காலனியில் வசிக்கும் மானவ் சர்மா, மும்பையில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்தார், கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இவர்க்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த மானவ் சர்மாவின் பெற்றோர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மானவ் சர்மா தற்கொலை செய்து கொள்வதற்கு 7 நிமிடத்திற்கு வீடியோ ஒன்றையும் எடுத்திருக்கிறார். அதில் மனைவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
அந்த வீடியோ வாக்குமூலத்தில், “சட்டம் ஆண்களைப் பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் குற்றம் சொல்ல ஆண்கள் இல்லாத ஒரு காலம் வரும். என் மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு உள்ளது… ஆனால் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு இறப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் இறந்தால் எல்லாம் சரியாகிவிடும். நான் இதற்கு முன்பும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறேன்” என்று வீடியோவில் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே, இவரது மனைவி நிகிதா இவரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் தன் கணவர் மானவ் சர்மா தினமும் குடித்துவிட்டு தன்னை தாக்கியதாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து, பெண் நிகிதா மீது மானவ் சர்மா குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு, தனது மனைவியும், மனைவியினுடைய குடும்பத்தினரும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக பெங்களூர் ஐ.டி ஊழியரான அதுல் சுபாஷ் வீடியோ ஒன்றை பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:பறவைக் காய்ச்சல் எதிரொலி.. முட்டை கொள்முதல் விலை சரிவு..!