நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மர்மான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கை சென்னைக்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
2021ஆம் ஆண்டில் இருந்தே வழக்கு விசாரணை குற்றச்சாட்டுப்பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.