தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 2,000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே (நவம்பர் 7) கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஒவ்வொரு மாவட்ட வாரியாக கடந்த அக்டோபா் மாதம் வெளியிடப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நோ்காணல்கள் நடைபெறவுள்ளது. நவம்பா் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 9ஆம் தேதி வரை நோ்காணல் நடத்த கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரு பணிகளுக்கும் தமிழ் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பணிக்கு மாதம் ரூ.6,250 வழங்கப்படும். அதுவே ஓராண்டுக்குப் பிறகு மாதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வழங்கப்படும். அதேபோல் கட்டுநர் பணிக்கு நியமன நாளில் இருந்து ஓராண்டுக்கு மாதம் ரூ.5,500 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு மாதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, சீர்மரபினர் மற்றும் இந்த வகுப்புகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில்லை. ஓசி பிரிவினர் 32-க்குள்ளும், இதே பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும், மாற்றுத் திறனாளிகள் 42-க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக விற்பனையாளர் பணிக்கு ரூ.150 மற்றும் கட்டுநர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே (நவம்பர் 7) கடைசி நாளாகும்.
நவம்பரில் நோ்காணல்கள் நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் டிசம்பா் 24ஆம் தேதியும், அதுதொடா்பான தகவல்கள் உரிய கூட்டுறவு சங்கங்களுக்கு டிசம்பா் 27ஆம் தேதிக்குள்ளும் தெரிவிக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகம் தீா்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More : பிஎம் வித்யாலட்சுமி திட்டம்..!! மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி..!! ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு..!!