fbpx

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்…! தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அன்புமணி கோரிக்கை…!

ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறதா?5 மாதங்கள் நிறைவடைந்தும் ஆசிரியர்தேர்வு அறிவிக்கை வெளியிடாதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில் தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை. கல்வி சார்ந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதமும், 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிவிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும், பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மே மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஓர் அறிவிக்கைக் கூட வெளியாகவில்லை.

’இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாதீங்க’..! தமிழக அரசை கேட்டுக்கொண்ட அன்புமணி..!

ஆசிரியர் தேர்வு வாரியம் 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 15,149 பேரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருந்தது. அவர்களில் 5 வகையான பணிகளுக்கு 14,656 பேரை, அதாவது 97 விழுக்காட்டினரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகள் மே மாதத்திற்குள்ளாக வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் என சுமார் 11,000 பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி முடிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான தொடக்கக்கட்ட பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்றால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா அல்லது உறங்குகிறதா?

அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் என்பது தகுதித்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்; கவுரவ விரிவுரையாளர்கள், பகுதி நேர மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

Vignesh

Next Post

#Rain: தமிழகத்தில் இன்று மொத்தம் 10 மாவட்டத்தில் பயங்கர மழை...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Wed May 31 , 2023
இன்று தமிழ்நாடு, புதுச்சேரிமற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திண்டுக்கல்‌, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தருமபுரி,நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, சேலம்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும்‌ 1 மற்றும்‌ 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும்‌ […]

You May Like