கொரோனா பிடியில் இருந்து உலகம் இன்னமும் முழுமையாக மீளவில்லை. நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகிறார்கள். இதற்கிடையே, புதிய ரக கொரோனா திரிபுகள் குறித்தும் அவ்வப்போது அச்சுறுத்தல்கள் எழத்தொடங்கி இருக்கின்றன. கொரோனா பிடியிலிருந்து உலகைக் காத்ததில் தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உண்டு.
அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்ட தடுப்பூசியின் நற்பலன்கள் காரணமாக உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிர் பிழைத்துள்ளனர். ஆனாலும், இந்த தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பான பிரச்சாரம், அதனை எதிர்ப்பவர்கள் மத்தியில் தணிந்தபாடில்லை. அரிதான சிலருக்கு மட்டும் இரத்தத்தை உறையச் செய்வதால், மாரடைப்புக்கு வித்திடுவதாக கொரோனா தடுப்பூசிக்கு எதிராக புகார்கள் எழுந்தன. அதனை உறுதி செய்வதுபோல கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மத்தியில் மாரடைப்பில் பலியானவர்கள் பரவலாக அடையாளம் காணப்பட்டது.
கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகளை அறிவியலாளர் சமூகம் முழுமையாக மறுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை. ஆய்வுகள் தொடர்வதாகவே தெரிவித்திருக்கின்றனர். கொரோனா தடுப்பூசிக்கு எதிரான குரல்களில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் எலான் மஸ்க். நேற்றைய ட்விட்டர் பதிவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான தனது அதிருப்தியை பதிவு செய்திருக்கிறார்.
கொரோனா தடுப்புக்கான பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டது தன்னை மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்தது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “தடுப்பூசியை நானும் நம்புகிறேன். ஆனால், அதன் குணப்படுத்தல் நோயை விட மோசமாக இருக்கிறது. எனவே தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த விவாதங்கள் தொடர வேண்டும்” என்று தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.