திருவண்ணாமலையில் கடந்த ஒரு வருடமாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதி ராணி அண்ணாதுரை நகரை சேர்ந்தவர் பாஷா. இவர், அன்புடைமை அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் பெரியம்மா தாமரையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 16 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட Child Line 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்து வந்த பாஷாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவரை கையும் களவுமாக பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.