மார்கழி மாதத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி வரும் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். இந்த 10 நாட்களிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதனைக்கான ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவர். இதற்காக ஏற்கனவே ரூ. 300 சிறப்பு தரிசனம் மற்றும் வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. இந்த டிக்கெட் விநியோகம் முடிவடைந்த நிலையில், நாளை (டிச.22) முதல் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி, திருப்பதியில் விஷ்ணு நிவாசம் (ரயில் நிலையம் எதிரே), மாதவம் ( பஸ் நிலையம் எதிரே), கோவிந்தராஜ சத்திரம் (ரயில் நிலையத்தின் பின்புறம்), பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபிரி கருடன் நிலை அருகே), ராமசந்திரா புஷ்கரணி (மஹதி அரங்கம் அருகே), இந்திரா மைதானம் (மார்க்கெட் அருகே), ஜீவகோனா உயர் நிலைப்பள்ளி, ராமாநாயுடு உயர்நிலைப்பள்ளி, ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி, எம்.ஆர் பள்ளி ஆகிய 9 இடங்களில் 90 விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.