வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வேலூர் மாவட்டத்திலிருந்து காட்பாடி வழியே பெண்ணைக்கு போகும் வழியில் 25கிலோமீட்டர் தொலைவில், அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு : மலைப் பயணம் சுமார் 454 படிக்கட்டுகளை கொண்டதாகும். சுற்றி ஆயிரக்கணக்கான மரங்களை காணலாம். மழைக்காலத்தில் இந்த மரங்கள் மிகப் பசுமையாக காட்சியளிக்கும். காலை நேரத்தில் மலை ஏறுவது நல்லது. ஆங்காங்கே தண்ணீர் வசதியும் உள்ளது. 30 நிமிடங்களுக்கு மலையை ஏறிவிடலாம். விறுவிறுப்பாக நடந்தால் 20 நிமிடங்களில் உச்சியை அடையலாம்.
மேலே வந்தவுடன் கம்பீரமான கொடி மரத்தையும் அருகில் வள்ளிமலை முருகன் குன்றினையும் பார்க்கலாம். குன்று வெளியில் இருந்து காண்பதற்கு சிறிதாக தெரியும். ஆனால் உள்ளே நீண்டு கொண்டே போகும். குகையின் இடது பக்கத்தில் வள்ளியம்மை சன்னதியும் அதை தொடர்ந்து விநாயகர் சன்னதியும் இருக்கும்.
அடுத்ததாக முருகப் பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையோடு காட்சியளிப்பார். முருகனை தரிசித்த பிறகு குகை கோயிலை சுற்றி வர பாறைகளுக்கு இடையே படிக்கட்டு பாதை அமைந்திருக்கும். வள்ளி முருகப் பெருமான் திருமணம் நடைபெற விநாயகரும் உதவியதாக கூறப்படுகிறது. தரிசனம் இதோடு நிறைவடைவதில்லை. மலையிலேயே திருப்புகழ் ஆசிரமம், குளம், ஜெயின் கோயில் உள்ளது
மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கோவிலுக்கு ஒரு முறை வந்து வழிபட்டு சென்றால், திருமண தடை நீங்கும் என சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் மாசியில்-பிரம்மோற்ஸவம், வைகாசி-விசாகம், ஆடிதெப்பத்திருவிழா, திருக்கார்த்திகை, தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும்.
Read more : வாஸ்து சாஸ்திரத்தின்படி.. வீட்டை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரியுமா..?