பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நெற்றியில் காயத்துடன் சடலமாக கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.. அவரின் வீட்டுக்கு மலர்கொடி என்ற பணிப்பெண் 11 மணிக்கு வேலைக்காக வருவது வழக்கம்.. இந்நிலையில் இன்று பணிப்பெண் வந்த போது கதவு திறக்கப்படாததால் வாணி ஜெயராமின் தங்கைக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து உடனடியாக வாணி ஜெயராமின் தங்கை உமா நேரில் வந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. காவல்துறையினர் முன்னிலையில் உள் தாழிடப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது வீட்டின் உள்ளே கட்டிலுக்கு அருகே, வாணி ஜெயராம் விழுந்து கிடந்துள்ளார்.. மேலும் அவரின் நெற்றிப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து வாணி ஜெயராம் வீட்டில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.. திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆய்வு செய்தார்..
எனினும் தவறி விழுந்ததால் வாணி ஜெயராம் உயிரிழந்தாரா..? அல்லது உடல்நலக்குறைவால் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதா என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. அதன் அடிப்படையில் வாணி ஜெயராமின் உடல் தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. மருத்துவர்களின் ஆய்வுக்கு பிறகு அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது..
1945-ம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் வாணி ஜெயராம்.. அவரின் இயற்பெயர் கலைவாணி.. இவர் 1971-ம் ஆண்டு வெளியான குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியாக அறிமுகமானார்.. பின்னர் 1973-ம் ஆண்டு ‘தாயும் சேயும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார்.. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. மல்லிகை, என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கேள்வியின் நாயகனே உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை வாணி ஜெயராம் பாடி உள்ளார்..
சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர் வாணி ஜெயராம்.. மேலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில், தென்னிந்திய திரைப்பட இசையில் அவர் செய்த சாதனைகளுக்காக ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.. குடியரசு தினத்தை ஒட்டி அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷ்ண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.