புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலினத்தவர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதா? என பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அந்த குற்றப் பத்திரிகையில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் தரப்பின் வழக்கறிஞர் கனகராஜ் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பவானி மோகன், “இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமைகள் இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாகத் தான் வேங்கைவயல் சம்பவம் உள்ளது. குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. எனவே, இதை ஏற்கக் கூடாது” என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர், “இந்த வழக்கு தொடர்பாக தகவல் சொல்வதற்கு 3 முறை அவர்களுக்கு சம்மன் அனுப்பினோம். ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார். மேலும், மனிதக் கழிவு கலந்த குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட தண்ணீரை யாரும் குடிக்கவில்லை. ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த குழந்தைகள் இந்த குடிநீரை குடிக்கவில்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தி, இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 3ஆம் தேதி (திங்கட்கிழமை) வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Read More : தேர்தலை மனதில் வைத்து பீகாருக்கு மட்டும் அறிவிப்பு..!! தமிழ்நாட்டிற்கு ஏன் இல்லை..? எடப்பாடி பழனிசாமி கேள்வி