ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அதே சமயம், ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவியான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு, அந்தக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்ஜீ கவுதம், முன்னாள் எம்.பி. ராஜாராம் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு நேற்றைய தினம் வந்திருந்தனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 500க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு, ராம்ஜீ கவுதமை நேரில் சந்தித்து, தற்போதைய மாநில தலைவர் ஆனந்தன் மூத்த நிர்வாகிகளைத் தொடர்ந்து நீக்கிவருவதாகக் குற்றம்சாட்டினர். மேலும் புதிய மாநில தலைவராக மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவியான பொற்கொடியை நியமிக்கக் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் விடுதிக்கு வந்த திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தற்போதைய மாநிலத்தலைவராக உள்ள ஆனந்தன் பழிவாங்கும் மனப்பான்மையுடன் செயற்படுகிறார் எனக் கூறி, மாநில பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை கேள்வி எழுப்பினார். மேலும், இவர்கள் அனைவரும் கடந்த 17 ஆண்டுகளாக எனது கணவர் ஆம்ஸ்ட்ராங் உடன் பணியாற்றியவர்கள். கட்சியின் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு புரிதல் உள்ளது. இவர்கள் தான் கட்சியை வளர்த்தவர்கள் எனவும், கட்சி எவ்வளவு எளிதில் யாரிடமும் ஒப்படைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் அவரது வீட்டு அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி ஊழியர்களை போல வேடமிட்டு வந்த கும்பல், அவரை வெட்டி கொலை செய்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொலைக்குப் பிறகு, மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் மனைவியை நியமிக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரியிருந்தபோதும், அவர் அதனை மறுத்துவிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் பி. ஆனந்தன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதேவேளை, மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.