வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் கடுப்பாகி வருகின்றனர். இந்த நிலையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள வெங்கடேஷ் பிரசாத் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கேவலமாக விளையாடி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சமீப காலமாக இந்திய அணி வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழந்து இருக்கிறது என்பதை குறிப்பிட்ட வெங்கடேஷ் பிரசாத், கடந்த இரண்டு டி20 உலக கோப்பை தொடரிலும் நாம் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்று கூறினார். நாம் இங்கிலாந்து அணியை போல் ரசிகர்கள் மத்தியில் எவ்வித உற்சாகத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா இருந்தது போல் எதிர் அணிகளை மிரட்டுவதும் இல்லை என்று சுட்டிக்காட்டிய வெங்கடேஷ் பிரசாத், இதனால் பிசிசிஐயிடம் பணமும் அதிகாரமும் இருந்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்திய அணி வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தை கூட கொண்டாடும் மனநிலைக்கு நாம் பழகிவிட்டோம் என்று குற்றஞ்சாட்டிய வெங்கடேஷ் பிரசாத், சாம்பியன் வீரர்களாக நிறைந்து இருந்த இந்திய அணியில் தற்போது அப்படி ஒரு நிலை இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.