தீபாவளி நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகரில் ஏற்கனவே காற்று மாசுபாடு காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு மிக அபாயகரமான நிலையில் இருந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சுவாயுக்கள், வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவை காரணமாக காற்றுமாசு அதிகரித்து இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த 4 மாநிலங்களும் விவசாயக் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளின் டிசம்பர் குளிர்கால விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 9 முதல் நவம்பர் 18ம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.ஏற்கனவே மோசமான காற்றின் தரம் காரணமாக நவம்பர் 3 முதல் நவம்பர் 10ம்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விடுமுறை நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.