திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், டிசம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், டிசம்பர் 21ஆம் தேதி அனைத்து அலுவலகங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது குறிப்பிடத்தக்கது.