சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின் இணைப்பு தரக்கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 1.69 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுமார் 3 லட்சம் விவசாயிகள் இன்னும் இந்த சேவைக்காக காத்திருக்கின்றனர். இலவச மின்சாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பல விவசாயிகள் தாங்களாகவே அல்லது அரசு மானியத்துடன் சூரிய சக்தி பம்ப் செட்களையும், சிலர் டீசல் பம்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஏப்ரல் 8ஆம் தேதி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அந்த சுற்றறிக்கையில், விவசாயிகள் ஏற்கனவே சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருந்தால், அவர்களுக்கு இலவச மின்சாரம் தரக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. அப்படிப்பட்ட விவசாயிகள் LT-IIIA(1) என்ற பிரிவின் கீழ் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. அதாவது இந்த பிரிவில், முதல் 500 யூனிட்களுக்கு ஒரு யூனிட் ரூ.4.80, அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட் ரூ.6.95 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இது விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் செயல் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து, இந்த அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இயக்குனர் அனுப்பிய புதிய சுற்றறிக்கையில், “முந்தைய சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் விவசாய பொறியியல் துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.