பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 19-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.
இந்தியாவின் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், விவசாயிகளை ஊக்குவிக்க வகையிலும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான், “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 3 தவணைகளாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 19-வது தவணை இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் விவசாயிகளுக்கான ரூ.22,000 கோடியை பிரதமர் மோடி விடுவிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ”பிஎம் கிசான் திட்டம் தொடங்கியது முதல் தற்போது வரை விவசாயிகளுக்கு ரூ.3.46 கோடி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
E-KYC கட்டாயம்
இந்நிலையில் தான், பிஎம் கிசான் திட்டத்தில் நீங்கள் பலன்பெற வேண்டுமென்றால், E-KYC செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. E-KYC செய்திருந்தால் மட்டுமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், உங்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால், பிம் கிசான் யோஜனா செயலி மூலம் நீங்களே E-KYC சரிபார்க்கலாம். தவணை பணம் ரூ.2,000 விடுவிக்கப்பட்ட பின்பும், பல விவசாயிகளுக்கு தங்களுக்கு இன்னும் பணம் வரவு வைக்கவில்லை என கூறி வருகின்றனர். இதற்கு காரணமே, E-KYC நிறைவு செய்யாததால் தான். எனவே, இத்திட்டத்தில் பயன்பெறக் கூடிய அனைத்து விவசாயிகளும் e-KYC முடித்திருக்க வேண்டும்.