தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழையால் நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பிற்பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதி கனமழையால் முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வாளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நிர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (டிச.17) இரவு 50,000 கன அடிக்கு மேல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால், கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் தாமிரபரணி ஆற்று நீர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.