வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 17, 18) சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால், இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, நாளை (டிசம்பர் 17) கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் தஞ்சை, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாளான 18ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை தொடரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.