கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய புகாரில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு. ஏற்கனவே, இதே பொய்ச் செய்தியை பரப்பிய சின்ஹா, ஹரி பிரபாகர், சண்முகம், ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மையை மறைப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு தனது எக்ஸ் தளத்தில்; கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சகோதரி கோமதி அவர்கள், திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்துப் பதிவிட்டதற்கு, என் மீது காவல்துறையினரை ஏவி விட்டு, பாசிச திமுக அரசு ஒரு வழக்கை பதிவு செய்திருப்பதாக அறிகிறேன்.
திமுக மறைக்கத் துடித்த உண்மை இதோ. பாஜகவுக்கு வாக்களித்த காரணத்திற்காகத் தான், சகோதரி கோமதி அவர்கள் கொலை செய்யப்பட்டார் என்பதை, அவரது கணவர் ஜெயக்குமார் மற்றும் அவரது சொந்தங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். முன்விரோதம் என்பது திமுகவின் சப்பைக்கட்டு நாடகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
ஊழல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்..? தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே என் மீது இரண்டு வழக்குகள் தொடுத்திருக்கிறார். இவ்வாறு பொய்யான வழக்குகள் தொடுத்து எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று திமுக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. உங்கள் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.