‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை நியூயார்க் காவல்துறையினர் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் நீல் நிதின் முகேஷ். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான விஜயின் ‘கத்தி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். இந்நிலையில். நியூயார்க்கில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து அண்மையில் அவர் ஒரு பேட்டியளித்துள்ளார்.
அதில், “நான் ‘நியூயார்க்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. நியூயார்க் ஏர்போர்ட்டில் தடுப்புக் காவலில் காவல்துறையால் வைக்கப்பட்டேன். என்னைப் பார்த்தால் இந்தியன் போல இல்லையாம். இதனால், என்னை அவர்கள் சிறைபிடித்தார்கள். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருப்பதாக கூறியும், அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
என்னைப் பற்றி பேசவே அவர்கள் விடவில்லை. நான் பேச அனுமதிக்காமல் அவர்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். சுமார், 4 மணி நேரமாக சிறைபிடிக்கப்பட்டேன். பின்னர், என்னிடம் அவர்கள் வந்து, ‘என்ன சொல்ல போகிறாய்?’ எனக் கேட்டனர். அதற்கு நான் ‘என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள்’ என்றேன். அதன் பிறகே விடுவிக்கப்பட்டேன்” என்றார்.