பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், அணித் தலைவர்களின் கவனத்திற்கு, தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, இனி வரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம், பொதுக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இரண்டாவதாக கொள்கைப்பாடல், 3-வதாக உறுதிமொழி ஆகியவை தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சியின் இறுதியில் கழக கொடிப் பாடல் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் முக்கியமாக, தங்கள் மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும்” என்று விஜய் தெரிவித்துள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.