அரசியல் மற்றும் சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், தற்போது சிறிய ரக தனி விமானத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்த விமானத்தின் வாடகை குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமே விஜய்யின் கடைசி படமாகும். இந்தப் படத்தை முடித்த பிறகு, இனி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயகன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்த நிலையில், மே 1ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை வரவேற்பதற்காக மதுரையில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் ஒன்று கூடினர். இதனால் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல கடும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் தான், அரசியல் மற்றும் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் விஜய், சமீப காலமாக தனி விமானங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார். அவர் பயன்படுத்தும் தனி விமானத்தின் மதிப்பு ரூ.8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விமானத்தின் ஒருநாள் வாடகை ரூ.14 லட்சம் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் கடைசி படம், இயக்குனர் எச்.வினோத், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.