கடந்த 2017இல் இருந்து விஜய் டிவியில் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், திடீரென 8-வது சீசனில் இருந்து விலகினார். கடந்த சீசனில் அவர் எதிர்கொண்ட எதிர்மறை விமர்சனங்கள் தான் இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்பட்டது. பின்னர், கமல் இடத்தை யார் நிரப்ப போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியது.
அந்த வகையில், கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அவரது தொகுத்து வழங்கும் பாணி பலருக்கு பிடித்திருந்தாலும், ஒருசிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். மேலும், கமல்ஹாசனை மிஸ் செய்கிறோம் என்று பதிவிட்டு வந்தனர். கமல்ஹாசனின் பாணியிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்றாலும், போட்டியாளர்களிடம் பேசி, அவர்களின் மனநிலையை வெளிப்படுத்த வைப்பதில் கமல்ஹாசன் கைதேர்ந்தவர் என்பதே ரசிகர்கள் பலரின் கருத்தாக இருந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், ஜனவரி 2025ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இந்நிகழ்ச்சி விஜய் டிவியிலும், 24 மணி நேர லைவாக ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பப்பட்டு வந்தது. டிவியில் வராத காட்சிகளை ஹாட்ஸ்டாரில் இருந்து எடிட் செய்து அதை ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர். அந்த வகையில், இந்த 8-வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். இவரின் வெற்றி ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தான், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் இத்தனை ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக, கடந்த 8-வது சீசனின் மறு ஒளிபரப்பு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி மாலை 7 மணி முதல் இந்நிகழ்ச்சி மறுஒளிபரப்பாகிறது. ஓடிடியில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜய் டிவியில் இருந்து எதற்காக கலர்ஸ் தமிழ் சேனலுக்கு பிக்பாஸ் மாறியது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.