தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளைய தினம் நடைபெறுகிறது. இதில் தீர்மானங்கள் தொடங்கி முக்கிய அறிவிப்புகள், விஜய்யின் ஆவேச உரை வரை பல்வேறு விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் தவெகவின் முதல் மாநில மாநாடு முடிந்த கையோடு கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சி தொடங்கி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நாளை நடத்தவிருக்கிறார்.
கட்சியின் விதிமுறைப்படி 15 நாட்களுக்கு முன்பு தேதி அறிவிக்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல், வாட்ஸ் அப் மற்றும் தபால் மூலம் தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தமாக 2,150 பேர் பங்கேற்க இருக்கிறார்கள் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் அனைவரும் காலையிலேயே வந்து விட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கும் பொதுக்குழு கூட்டம், நண்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, அரசு ஊழியர்கள் போராட்டம், இரு மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக 15 முதல் 20 தீர்மானங்கள் வரை கொண்டு வர வாய்ப்புள்ளது.
முன்னதாக நடந்த கட்சியின், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய், விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், நாளைய தினம் பொதுக்குழுவில் உரையாற்றும் அவர், பூத் கமிட்டி மாநாட்டு தேதியை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே கால அவகாசம் இருக்கும் நிலையில், கட்சியின் பணிகளை தீவிர படுத்துதல்தொடர்பாகவும், மாவட்ட செயலாளர்கள் அடுத்த கட்டமாக தங்களுடைய மாவட்டங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விரிவான அறிவுரையை விஜய் வழங்கவுள்ளார்.
விஜய்யின் கடைசி திரைப்பட சூட்டிங் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில், அவரின் சுற்றுப்பயணம் குறித்தான ஒரு சமிக்கையை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய பிறகு சுமார் ஒரு வருட காலமாகவே திமுக, பாஜகவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து வந்த விஜய், சமீப நாட்களாக நேரடியாக தாக்க துவங்கியுள்ளார். அறிக்கையிலும், பேச்சிலும் திமுகவையும், பாஜகவையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார். இதனையொட்டியே, நாளை மேடை ஏறும் விஜய்யிடம் இருந்து தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்த ஆவேச உரையை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.