fbpx

விஜயகாந்தின் சொந்த மண்ணை சொந்தமாக்கிக் கொள்ளும் விஜய் பிரபாகரன்..!! மதுரையில் போட்டி..?

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியிலும் கூட்டணி அமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேமுதிகவும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்க போகும் முதல் தேர்தல் இது. விஜயகாந்தை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற குற்ற உணர்ச்சியில் மக்கள் கண்ணீர் சிந்துவதை நான் தினமும் பார்க்கிறேன். ஏதோ அனுதாப வாக்குகளாக மாறும் என நினைத்துவிடாதீர்கள். இந்த தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் தேமுதிகவை சேர்ந்த மாவட்டச் செயலாலர்களின் கருத்து.

எங்களுக்கு இருப்பது 4 ஆப்ஷன்கள்தான். ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி, பிறகு பாஜக கூட்டணி, இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவதுதான். எனவே தனித்து போட்டியிடுவதுதான் நல்லது என முடிவு செய்துள்ளோம். அது போல் மற்ற 3 கட்சிகளில் யார் 14 லோக்சபா தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது போல் நான், சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகிறார்கள்.

விஜயகாந்த் மாதிரியே விஜய பிரபாகரன் இருப்பதால் அவர் எந்த தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் விஜயகாந்த் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த போது அவரது தலைமையும் கட்சியையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதனால் மக்கள், அவரை தனித்து போட்டியிட்ட போது எம்எல்ஏவாக்கினர். அதன் பிறகு கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதும் அவரை கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கொடுத்தனர். ஆனால், எங்கள் துரதிர்ஷ்டம் உடல் ஆரோக்கியம் இல்லாமல் போனதாலேயே விஜயகாந்தின் அரசியல் முடிவுக்கு வந்தது.

விஜயகாந்துக்கு இருந்த செல்வாக்கு என்ன என்பது அவரது இறுதி ஊர்வலத்தில் தெரிந்துவிட்டது. தேமுதிகவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டியுள்ளது. விஜயகாந்த் உருவ ஒற்றுமையுடன் இருக்கும் அவரது மகன் விஜய பிரபாகரனை விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைக்க வேண்டும். அவர் போட்டியிட்டால் கண்டிப்பாக இந்த தலைமுறை வாக்காளர் கூட அவருக்கு வாக்களிப்பார்கள் என கட்சியினர் தெரிவித்துள்ளனர். மதுரையில் விஜயகாந்துக்கு ரசிகர்கள் அதிகம்.

அங்குதான் விஜயகாந்த் பிறந்து வளர்ந்தது, ரைஸ் மில் வைத்திருந்தது எல்லாமே! மதுரை மக்களுக்கு விஜயகாந்தின் தயாளு குணம் நன்றாக தெரியும். விஜயகாந்துக்கு கள்ளழகரின் ஆசி உண்டு. அந்த ஆசி அவருடைய மகனுக்கும் கிடைக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. எல்லாவற்றுக்கு மேல் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியதே மதுரை மண்ணில்தான்! விஜயகாந்துக்காக மதுரைக்காரர்கள் உயிரையே கொடுப்பார்கள், அவரது மகனை வெல்ல வைக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?

Chella

Next Post

பொதுத்தேர்வுகள் 2024: வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை.!

Thu Feb 8 , 2024
தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வருகின்ற மார்ச் மாதம் முதல் நடைபெற இருக்கிறது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ல் முடிகிறது.11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 25 -ஆம் தேதி முடிவடைகிறது. 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முடிவடைய உள்ளது. […]

You May Like