கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஆனால், இதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், முக்கிய நபர்கள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவேசமடைந்த தொண்டர்களும், ரசிகர்களும் இறுதி சடங்கிற்கு தங்களையும் அனுமதிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். இறுதி சடங்கிற்கு அனுமதி கேட்டு தொண்டர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.