கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருப்பவர் விஜயதரணி. இவர், விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3-வது முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வசந்தகுமார் எம்.பி. மறைந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி போட்டியிட முயற்சித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
இம்முறை கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று விஜயதரணி காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதால் விஜயதரணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி முன்னிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவியது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக விளக்கமளித்த விஜயதரணி, ”பாஜகவில் தான் இணையப் போவதாக பரவும் செய்திகளைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருப்பதாக கூறியுள்ளார். அதே சமயம், பாஜகவில் இணையப்போவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவலை விஜயதரணி ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மேலும், தான் டெல்லிக்கு வந்திருப்பது உண்மை என்றும் வழக்கறிஞர் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.