மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மெய்தி – குக்கி சமூகத்தினரிடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இதுவரையில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டனர். இருப்பினும், இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனால், மணிப்பூர் பதற்றமான மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சனாசபி மலைப்பகுதியில் நேற்று துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சண்டை காரணமாக, கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தம்னாபோகி, எய்ங்கன்போகி மற்றும் ஷாந்தி கொங்பால் உள்ளிட்ட பகுதிகளிலும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஹரிதாஸ்,37, எனும் போலீஸ்காரர் குண்டுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோல, உள்ளூர்வாசி ஒருவரும் காயமடைந்தார். கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்தே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், முதல்வர் பைரன் சிங், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, மணிப்பூர் டி.ஜி.பி., மற்றும் பாதுகாப்பு ஆலோசகருக்கு அறிவுறுத்தியிருந்தார்.