”வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஜாஃபர் அலி காவலில் எடுக்கப்பட்டுள்ளார்” என சம்பல் கோட்வாலி பொறுப்பாளர் அனுஜ் குமார் தோமர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் மசூதியில் நடந்த கணக்கெடுப்பு தொடர்பாக வெடித்த வன்முறை தொடர்பாக ஷாஹி ஜமா மசூதி குழுத் தலைவர் ஜாபர் அலி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். சம்பலில் உள்ள அவரது வீட்டிலிருந்து காவல்துறையினரால் அவர் அழைத்துச் செல்லப்பட்டு, இறுதியாக கைது செய்யப்படுவதற்கு முன்பு கோட்வாலி காவல் நிலையத்தில் மூத்த போலீசாரால் விசாரிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஷாஹி ஜமா மசூதி தலைவர் ஜாஃபர் அலியை அம்மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சம்பல் கோட்வாலி பொறுப்பாளர் அனுஜ் குமார் தோமர், “வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஜாஃபர் அலி காவலில் எடுக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட மசூதி, ஒரு பழமையான இந்துக் கோயில் மீது கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால், மசூதியைச் சுற்றி சர்ச்சை வெடித்தது. கடந்த 2024 நவம்பரில், நீதிமன்ற உத்தரவின்படி, தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது, வன்முறை வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை நடந்த மற்றும் பிற இடங்களில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட நிலையில், இவை இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.
Read More : சீமான் மீது அதிருப்தி..!! NTK-வில் இருந்து விலகி TVK-வில் இணைந்து கொண்ட வெற்றிக்குமரன்..!!