பார்டர் கவாஸ்கர் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75வது சதத்தை விராட் கோலி பதிவு செய்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 2போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியா முன்னிலையில் உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 178.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் விராட் கோலி 186 ரன்னும், சுப்மன் கில் 128 ரன்னும் எடுத்தனர். இதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91 ரன் முன்னிலை உள்ளது.
இப்போட்டியில் விராட் கோலி தனது 75வது சதத்தை பதிவு செய்துள்ளார். 1207 நாட்களுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதம் விளாசியுள்ளார். கடைசியாக 2019 நவம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். 241 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 75 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 28 சதங்களும் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. விராட் கோலியின் சதம் இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது