விராட் கோலி தனது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் “கிங் கோலி” என்றும் விராட் கோலி செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் மற்றும் டி20யில் ஒரு சதம் என மொத்தம் 75 சதங்களை விளாசி, அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.
இதேபோல், ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணிக்காக ஆடிவரும் விராட் கோலி, ஐபிஎல்லில் 6624 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் ஒரே அணிக்காக 15 ஆண்டுகள் ஆடிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஆனால் விராட் கோலியால் ஆர்சிபி அணிக்கு ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்பதுதான் பெரிய சோகம். இந்தநிலையில் 16 வது ஐபிஎல் சீசன் இன்று தொடங்குகிறது. இதில் பெங்களூரு அணி அதன் தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற ஏப்ரல் 2ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தநிலையில் விராட் கோலி சமூக வலைதளமான ‘கூ’ (KOO)-வில் தனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவின் கேப்சனில், “உங்கள் மார்க்ஷீட்டில் மிகக் குறைவாகச் சேர்க்கும் விஷயங்கள், உங்கள் குணாதிசயத்தில் எப்படி அதிகம் சேர்க்கின்றன என்பது வேடிக்கையானது.” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவும், அவர் இணைத்துள்ள 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துடன் அதை பகிர்ந்தும் வருகின்றனர்.