நடப்பு ஐபிஎல் சீசனில் மீண்டும் ஒருமுறை பந்துவீசுவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டால், ஸ்டாண்டிங் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டின் 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையிலும் கோப்பையை வெல்லும் முனைப்பிலும் வெறித்தனமான ஆட்டத்தை ஆடி வருகின்றன. அந்தவகையில், இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தீவிர வெறியுடன் விளையாடி வருகின்றனர். இதுவரை சிறப்பாக ஆடி வந்தாலும், ஆர்சிபி அணி புள்ளிபட்டியலில் சற்று கீழே உள்ளது.
ஆர்சிபி அணி, ஃபாஃப் டுப்ளெசிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகிய 4 வீரர்களைத்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. அவர்களில் இருவராவது ஜொலித்தால் தான் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது. அவர்கள் சொதப்பினால் படுதோல்வி அடைகிறது.இந்த சீசனில் ஃபாஃப் டுப்ளெசிஸ் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து, இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். கோலி மற்றும் மேக்ஸ்வெல்லும் நல்ல ஃபார்மில் ஆடிவருகின்றனர். கடைசி 2 போட்டிகளில் ஃபாஃப் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டுமே ஆடினார். அதனால் விராட் கோலி தான் கேப்டன்சி செய்துவருகிறார்.
கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி தான் ஆர்சிபி அணியை வழிநடத்தினார். இந்த 2 போட்டிகளிலுமே ஆர்சிபி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ஐபிஎல் விதிப்படி, முதல் முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதமும், 2வது முறை ரூ.24 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அந்தவகையில், விராட் கோலிக்கு முதல்முறை ரூ.12 லட்சம் அபராதமும், 2வது முறை ரூ.24 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுவிட்டது. இன்னுமொரு முறை ஆர்சிபி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்தால், விராட் கோலிக்கு ரூ.30 லட்சம் அபராதத்துடன் ஒரு போட்டியில் ஆடுவதற்கு தடையும் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.