இனி வரும் காலங்களில், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் பரவினால், அதை தற்போது உள்ள தடுப்பூசிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியாது. அதற்கென புதிய தடுப்பூசிகளை கண்டறிய வேண்டியது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 19ம் தேதி தமிழக மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில் தொடங்கிய, சர்வதேச மருத்துவ கருத்தரங்கின் நிறைவுநாள் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், கொரோனா தொற்றுக்கு பின், பல்வேறு பாடங்களை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை கற்று உள்ளது. பெருந்தொற்று காலத்தில், கொரோனா அல்லாத பிற மருத்துவ சேவைகளையும், தடையின்றி வழங்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டோம்.
ஏனெனில், அந்த காலகட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. அப்போது, பிற தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள் தடைபட்டன. இதனால், இணை நோய்களின் தாக்கம் அதிகரித்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வர்கள், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டனர். தற்போது, ஜெ.என்.1 போன்ற உருமாற்றமடைந்த கொரோனா தொற்று பரவி வருகிறது. மிதமான பாதிப்பை உருவாக்கும் இந்த வகை கொரோனா வீரியமானது இல்லை.
ஒருவேளை, இனி வரும் காலங்களில், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் பரவினால், அதை தற்போது உள்ள தடுப்பூசிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியாது. அதற்கென புதிய தடுப்பூசிகளை கண்டறிய வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.