சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான பதவி காலம் நிறைவுற்றதை தொடர்ந்து, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில், புதிய தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த 1ஆம் தேதி முதல் நாளை (ஆகஸ்ட் 8) வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவராக, ஏற்கனவே பதவி வகித்த ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி டிவோர்கோவிச் (Arkady Dvorkovich), இரண்டாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆண்ட்ரி பேரிஸ்போலெட்ஸ் உடன் 157 வாக்குகளை பெற்று, முன்னிலையில் இருந்ததை அடுத்து, இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு முதல், ஆர்கடி டிவோர்கோவிச் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே சமயம் அவரை தொடர்ந்து துணைத் தலைவராக இந்தியாவின் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே உலக சதுரங்க கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கும் முயற்சி இருந்து வந்த நிலையில், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்ட பரிந்துரைகள் அடிப்படையில் அவருக்கு ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் இரண்டாவது முறையாக தலைவராக ஆர்கடி டிவோர்கோவிச்சும், துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.