அடுத்து வரும் 3 ஆண்டுகளில் சுமார் 11,000 ஊழியர்களை உலக அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் சிஇஓ மார்கெரிட்டா டெல்லா வால்லே தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் வகையில் இதைச் செய்ய வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்குறைப்பு குறித்து வோடபோன் நிறுவனம் முதல் முறையாக அறிவித்தது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் புதிய சிஇஓ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் அவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். முன்னதாக, வோடபோன் நிறுவனத்தின் நிதித்துறை தலைமை பொறுப்பை அவர் கவனித்து வந்துள்ளார். “இன்று, வோடபோன் நிறுவனம் சார்ந்த எனது திட்டங்களை நான் அறிவிக்கிறேன். வணிகம் சார்ந்து நமது செயல்திறன் போதுமானதாக இல்லை. தொடர்ந்து சேவை வழங்க வேண்டும் என்றால் வோடபோனில் மாற்றம் அவசியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்கள், எளிமையான நிறுவன செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனத்தின் சார்பில் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். மேலும், ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம். இது நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமாகும்” என மார்கெரிட்டா டெல்லா வால்லே தெரிவித்துள்ளார்.
வோடபோன் நிறுவன வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை உலக அளவில் அடுத்த 3 ஆண்டுகளில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது. இது புதிய சிஇஓ-வின் திட்டங்களில் ஒன்றாம். கடந்த 1994 முதல் டெலிகாம் சேவையை இந்தியாவில் வழங்கி வருகிறது வோடபோன் நிறுவனம். கடந்த 2018ஆம் ஆண்டு ஐடியா நிறுவனத்துடன் வோடபோன் இந்தியா இணைந்தது. தற்போது இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் ஐடியா நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.