பயணம் செய்கையில் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
தொலை தூர பயணங்களின் போது காதுகளுக்கு பின்புறம் ஒட்டும் படியான பேட்ச்களை வாங்கி கொள்ளலாம். பயணத்திற்கு முன்னரே இஞ்சியை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறிதளவு இஞ்சி துருவலை வாயில் போட்டுக்கொள்ளவும். இஞ்சி துருவல் குமட்டலை தடுக்கும் என சில மருத்துவர்களால் கூறப்படுகிறது. எனவே, இதை பயன்படுத்தலாம்.
புதினா எண்ணெயை 3 துளிகள் கைக்குட்டையில் நனைத்து பயணத்தின் போது கூடவே வைத்துக்கொள்ளலாம். இதன் வாசம் குமட்டலை கட்டுப்படுத்தும். ஒரு முழு எலுமிச்சை பழத்தை பயணத்தின் போது கையில் வைத்துக்கொள்வது மிகவும் நன்று. இதை இரண்டாக வெட்டி அதன் வாசத்தை முகர்வதால் குமட்டலை தவிர்க்க முடியும். எலுமிச்சை பழம், வயிற்று அமிலங்களை சமநிலை படுத்துகிறது. குமட்டலை குறைக்க இது உதவும். இதில் உள்ள சிட்ரஸ் வாசம் பயணம் தொடர்பான நோய் இருப்பவர்களுக்கு நன்கு பயணளிக்கும்.
பயணங்களின் போது ஏலக்காயை வாயில் போட்டு மெல்லலாம். இதனால் வாந்தி மற்றும் குமட்டலையும் தவிர்க்கலாம். பயணத்தின் போது தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை நேராமல் இருக்க உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். பயணத்தின் போது திடமான உணவுகளை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை பழ ஜூஸ்களாக இருந்தாலும் அதில் நீர் அதிகம் நிறைந்த பழங்களின் சாறுகளையே பருக வேண்டும். காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளை கண்டிப்பாக பயணங்களின் போது தவிர்க்க வேண்டும்.