‘வெள்ள பாதிப்புக்குத் தீர்வே கிடைக்கவில்லை’ என மடாதிபதி ஒருவர் கர்நாடக முதல்வரை அருகில் வைத்துக் கொண்டே குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மடாதிபதி ஒருவரும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய மடாதிபதி, ‘ஒவ்வொரு முறையும் மழை வரும்போது பெங்களூர் நகரில் வெள்ளம் நிற்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் அதிகப்படியான துயரங்களை சந்தித்து வருகின்றனர். ஒரு முறை வெள்ளம் வந்தால் அதிகாரிகளுக்குத் தெரியாதா? ஒருமுறை மழை வந்தால் எந்தெந்த பகுதியில் நீர் தேங்கும் எனத் தெரியாதா? வாக்கு கொடுத்தால் மட்டும் போதாது.. செய்து காண்பிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
அப்போது, அருகில் அமர்ந்து கொண்டிருந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆத்திரமடைந்து உடனடியாக வலுக்கட்டாயமாக மைக்கை வாங்கி கோபமாக ‘வெறும் வாக்குறுதி மட்டும் கொடுக்கவில்லை இதற்கென திட்டமிட்டு நிதியை ஒதுக்கி உள்ளோம். பணிகள் நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.