முத்தம்மாள் காலனியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண்ணை அமைச்சர் எ.வ.வேலு மீட்டுள்ளார்.
தென்மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக பெய்த கனமழையால் தூத்துக்குடி நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் முதல் பகுதியான இருக்கும் முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர், வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியில் மார்பளவு தண்ணீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று காலை முதலே தூத்துக்குடி பகுதியில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள் முகாமிட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் படகுகளும், லாரியும் செல்ல முடியாத நிலையில், அமைச்சர் எ.வ.வேலு 2 ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு உணவுகளை வழங்கினார். அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அதில் 8ஆம் தெருவில் நுழையும் போது மார்பளவு தண்ணீரில் தவித்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை ஜேசிபி இயந்திரம் மூலம் அமைச்சர் எ.வ.வேலு பத்திரமாக மீட்டார்.