ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை நீங்கள் மாற்றிவிட்டாலோ அல்லது தவறான எண்ணாக இருந்தாலோ அதை நீங்கள் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான சரிபார்ப்பு ஆவணங்களில் ஒன்றாகும். பள்ளி சேர்க்கை முதல் வங்கிக் கணக்கு திறப்பது வரை அனைத்திற்கும் இந்த எண் தேவைப்படுகிறது. மேலும், வங்கிகளில் புதிய கணக்கு துவங்கவும், நலத்திட்ட உதவிகள் பெறவும் ஆதார் கட்டாய ஆவணமாக உள்ளது. மேலும், நிதி பரிவர்த்தனைகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால், அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படுகிறது.
இதற்கிடையே, உங்கள் ஆதாரில் உள்ள எந்தவொரு தவறான தகவலும் குறிப்பிடத்தக்க சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பயனர்கள் தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கிறது. அந்த வகையில், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை நீங்கள் மாற்றிவிட்டாலோ அல்லது தவறான எண்ணாக இருந்தாலோ அதை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்கு, அருகில் உள்ள ஆதார் சேவா கேந்திரா மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு எளிதாக திருத்தம் மேற்கொள்ளலாம். அல்லது UIDAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆதாரில் திருத்தம் செய்ய அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுக்கொள்ளலாம். ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை உங்கள் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். எனவே, மொபைல் எண்ணை மாற்ற நினைப்பவர்கள் இந்த வழிமுறைகளை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.