அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2035ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 51% அல்லது 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பருமனாக அல்லது அதிக எடையுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ல் உலக மக்கள்தொகையில் 38 சதவீதம் பேர், அதாவது 2.6 பில்லியன் மக்கள் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர். வரும் ஆண்டுகளில் உடல் பருமன் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இதில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் அடங்கும். ஐ.நா சபையில் சபையில் அடுத்த வாரம் இது குறித்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து உலக உடல் பருமன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, அடுத்த 12 ஆண்டுகளில் உலகில் 51% அல்லது 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பருமனாக அல்லது அதிக எடையுடன் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல் விகிதம், குழந்தைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விரைவாக அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020ம் ஆண்டின் கணக்கின்படி, குழந்தைகளின் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்து, 2035ம் ஆண்டில், 208 மில்லியன் சிறுவர்கள் மற்றும் 175 மில்லியன் பெண்களுக்கு அதிகரிக்கும். அதிக எடையுடன் தொடர்புடைய உடல் பாதிப்பு காரணமாக சமூகத்திற்கான செலவு 2035க்குள் ஆண்டுக்கு 4 டிரில்லியன் டாலர்கள் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக இருக்கும். இந்தநிலையில், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் தொடர்புடைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய உலக உடல் பருமன் கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் பார், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதைப் பார்ப்பது மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது மிக தெளிவான எச்சரிக்கை. நிலைமை மோசமடைவதைத் தடுக்க ஆட்சியாளர்கள் இப்போது இருந்து செயல்பட வேண்டும். உலகம் முழுவதும் உள்ள அரசுகளும், மக்கள் பிரதிநிதிகளும் இளைய தலைமுறையினருக்கு உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார செலவிடுதலை தவிர்க்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் லூயிஸ் பார் கேட்டுகொண்டுள்ளார்.