ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் கிடையாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு 33 வயது நபர் ஒருவர் சாலையோரத்தில் அமர்ந்து தனது மொபைல் போனில் ஆபாச வீடியோவை பார்த்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக அவர் மீது IPC 292-வது பிரிவின் கீழ் ஆபாசமாக நடந்து கொள்வது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் மீது பதியப்பட்ட முதல் குற்றப்பத்திரிகை மற்றும் மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்ஹி கிருஷ்ணன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒரு நபர் தனது தனிப்பட்ட நேரத்தில் மற்றவர்கள் பார்க்கும்படி இல்லாமல் தனிமையில் ஆபாச வீடியோ பார்ப்பது குற்றமா என்ற கேள்விக்கு பதில் காண வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை குற்றம் என நீதிமன்றத்தால் அறிவிக்க முடியாது.
மேலும், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். சட்டப்படி அது குற்றம் ஆகாது. மேலும் அவர், அந்த ஆபாச வீடியோவை பகிரங்கமாக காட்சிப்படுத்தி, மற்றவர்களுக்கு தொந்தரவு விளைவிக்கும் வகையில் செய்திருந்தால் அது குற்றமாக கருதப்படும். அதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என நீதிபதி கூறினார்.