வெளிநாடுகளில் பெரும்பாலானோர் சாப்பிட்டு வரும் தண்ணீர் ஆப்பிள் பழத்தில் உள்ள ஏராளமான நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோயில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும் இதற்கு ரோஸ் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. இந்தியாவில் இதனை ஜாம் பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, மருத்துவ பலன்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது. ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்ட இந்த தண்ணீர் ஆப்பிளில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் மரம் ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடியது.அதிக நீர்ச்சத்து கொண்ட இந்தப் பழம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பழத்தில், பிளேவனாய்டுகள் எனும் பினாலிக் கலவைகள், இதயநோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளை சீராக்குகிறது. மாசுகள், ரசாயனங்கள் காரணமாக செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. தண்ணீர் ஆப்பிளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றப் பண்பு, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்டது. தண்ணீர் ஆப்பிளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இவை உடலை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
மது மற்றும் புகைப் பழக்கம், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹெபடோடாக்ஸிக் மருந்துகள் சாப்பிடுவது போன்றவற்றால் உண்டாகும் கல்லீரல் பாதிப்புக்கு இந்தப் பழம் சிறந்த தீர்வாகும். ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்க இப்பழம் உதவுகிறது. இப்பழத்தில், அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், அது கொழுப்புச்சத்துக்களை சீராக்க உதவுகிறது. இதன்மூலம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் குறைகிறது.